Categories:

ஜியாரத் அமீனுல்லாஹ்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
ஜியாரத் அமீனுல்லாஹ்
இந்த ஜியாரத்தினை அல்லாமா மஜ்லிஸி அவர்கள் 'மிகச் சிறந்த அறிவிப்பாளர்கள் வரிசையை கொண்ட மிகவும் உறுதியானதோர் ஜியாரத் என கூறுகின்றார்கள்';. ஷேய்க் அப்பாஸ் கும்மி அவர்கள் மபாதீஹுல் ஜினானில் 'இது மிகவும் உறுதியானது' என அறிமுகம் செய்துள்ளார்;கள்.
ஜாபிர் ஜுஃபி அவர்கள் இமாம் பாக்கிர் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடமிருந்து இவ்வாறு அறிவிக்கின்றார்;கள்: 'எனது தந்தை அலீ இப்னு ஹுஸைன் அலைஹிமுஸ்ஸலாம் அவர்கள், அவரது தந்தை இமாம் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் அவர்களது ஷஹாதத்திற்குப் பின்னர் மக்களோடு மிகவும் நெருக்கமாக இருப்பதை விரும்பாததினால், சில காலங்கள் அவர்களை விட்டும் சிறுதொலைவில் வாழ்ந்து வந்தார்கள். சிலநேரங்களில் தனது தந்தையினையும், அவரது பாட்டனாரையும் ஜியாரத் செய்யும் நோக்கில் ஈராக் நோக்கி பிரயாணம் செய்பவராகவும் இருந்தார்கள். அப்பிரயாணம் பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை. ஒருமுறை அமீருல் முஃமினீன் இமாம் அலீ அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஜியாரத் செய்ய அவர்கள் செல்லும்போது நானும் அவர்களோடு இருந்தேன். எங்களோடு எங்களது இரு ஒட்டகைகள் மாத்திரமே இருந்தன. நஜப் நகரினை நாங்கள் சென்றடைந்தபோது, அவர்கள் ஓர் குறிப்பிட்ட இடத்தில் தனது ஒட்டகத்தினை நிறுத்தி விட்டு, அவர்களது தாடி நனையும்வரை அழுதார்கள். பிறகு இந்த ஜியாரத்தினை ஓதினார்கள்':

 

بِسْمِ اللَّهِ الرَّحْمنِ الرَّحِيم
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றேன்
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ
இறைத்தூதர் நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவரது குடும்பத்தார் மீதும் ஸலவாத் கூறுவாயாக!
السَّلاَمُ عَلَيْكَ يَا أَمِينَ اللَّهِ فِي أَرْضِهِ وَ حُجَّتَهُ عَلَى عِبَادِهِ
பூமியில் இறைவனின் நம்பிக்கையாளரே! (அமீனுல்லாஹ்) இறையடியார்கள்மீது அவனது அத்தாட்சியாக இருக்கக் கூடிய உங்கள்மீது இறைவனது சாந்தியும் ஸலாமும் உண்டாகட்டும்!
السَّلاَمُ عَلَيْكَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ‏
(முஃமின்களின் தலைவரான) அமீருல் முஃமினீனே! உங்கள்மீது இறைவனது சாந்தியும் ஸலாமும் உண்டாகட்டும்!
(இந்த ஜியாரத்தினை அனைத்து இமாம்களுக்காகவும் ஓத முடியும். அவ்வாறு அமீருல் முஃமினீன் அவர்களைத் தவிர்ந்து பிறருக்கு ஓத விரும்பினால்,
يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ‏
என்பதற்கு பதிலாக நீங்கள் விரும்பும் இமாமின் பெயரினைக் கூறவேண்டும்)
أَشْهَدُ أَنَّكَ جَاهَدْتَ فِي اللَّهِ حَقَّ جِهَادِهِ
நீங்கள் இறை பாதையில் முறையான ஜிஹாதை புரிந்தீர்கள் என நான் சாட்சியளிக்கின்றேன்.

وَ عَمِلْتَ بِكِتَابِهِ وَ اتَّبَعْتَ سُنَنَ نَبِيِّهِ صلى‌الله‌عليه‌وآله
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களை நீங்கள் பின்பற்றினீர்கள் என்றும், இறைவனது வேதத்தினைக் கொண்டு செயல் புரிந்தீர்கள் என்றும் நான் சாட்சியளிக்கின்றேன்.
حَتَّى دَعَاكَ اللَّهُ إِلَى جِوَارِهِ فَقَبَضَكَ إِلَيْهِ بِاخْتِيَارِهِ‏
இறைவன் உங்களை அவனுக்கு அருகாமையில் அழைப்பதற்காக அவனது நாட்டத்தோடு உங்களது ஆத்மாவை கைப்பற்றும்வரை
وَ أَلْزَمَ أَعْدَاءَكَ الْحُجَّةَ مَعَ مَا لَكَ مِنَ الْحُجَجِ الْبَالِغَةِ عَلَى جَمِيعِ خَلْقِهِ‏
உங்களது எதிரிகளை , உங்களது அத்தாட்சிகளையும் ஆதாரங்களையும் ஏற்றுக்கொள்ளும்படி அவசியப்படுத்தினான், அனைத்து படைப்பினங்கள் மீதும் தெளிவான அத்தாட்சிகளை கொண்டுள்ளீர்கள்.
اللَّهُمَّ فَاجْعَلْ نَفْسِي مُطْمَئِنَّةً بِقَدَرِكَ رَاضِيَةً بِقَضَائِكَ مُولَعَةً بِذِكْرِكَ وَ دُعَائِكَ‏
இறைவா! உனது நிர்ணயித்த விதியினை ஏற்றுக்கொண்ட அமைதியான உள்ளமாகவும், உனது முடிவினை பொருந்திக்கொண்டவனாகவும், உன்னிடம் பிரார்த்திப்பதினையும், உன்னை ஞாபகமூட்டுவதில் பேராசை கொண்டவனாகவும் என்னை ஆக்குவாயாக!


مُحِبَّةً لِصَفْوَةِ أَوْلِيَائِكَ مَحْبُوبَةً فِي أَرْضِكَ وَ سَمَائِكَ صَابِرَةً عَلَى نُزُولِ بَلاَئِكَ‏
உனது தேர்வு செய்யப்பட்ட பொறுப்புதாரிகளை நேசிப்பவனாகவும், உனது வானிலும் பூமியிலும் பிறரின் நேசத்திற்குரியவனாகவும் என்னை ஆக்கியருள்வாயாக! உனது சோதனைகளின்போது பொறுமையையும் தருவாயாக!
شَاكِرَةً لِفَوَاضِلِ نَعْمَائِكَ ذَاكِرَةً لِسَوَابِغِ آلاَئِكَ
வெளிப்படையான உனது பரந்து விரிந்துள்ள அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துபவனாகவும், எண்ணிலடங்கா உனது மறைமுகமான அருட்கொடைகளை நினைவுகூருபவனாகவும் என்னை ஆக்குவாயாக!
مُشْتَاقَةً إِلَى فَرْحَةِ لِقَائِكَ مُتَزَوِّدَةً التَّقْوَى لِيَوْمِ جَزَائِكَ‏
மகிழ்வளிக்கக் கூடிய உனது சந்திப்பின்மீது அவா கொண்டவனாகவும், தீர்ப்பளிக்கக்கூடிய அந்த நாளில் இறையச்சம் எனும் தக்வாவினை எனது சேமிப்பாகவும் ஆக்குவாயாக!
مُسْتَنَّةً بِسُنَنِ أَوْلِيَائِكَ مُفَارِقَةً لِأَخْلاَقِ أَعْدَائِكَ مَشْغُولَةً عَنِ الدُّنْيَا بِحَمْدِكَ وَ ثَنَائِكَ‏
உன்னால் நியமிக்கப்பட்ட பொறுப்புதாரிகளின் வழிமுறையினை பின்பற்றுபவனாகவும், உனது எதிரிகளின் பண்புகளை விட்டும் தூரமானவனாகவும், உலகை விட்டும் விடுபட்டு உனது புகழினையும் துதியினையும் செய்பவனாகவும் ஆக்கிவைப்பாயாக!
(பிறகு இமாம் அவர்கள் தனது முகத்தினை கப்ரின்மீது வைத்து இவ்வாறு கூறினார்கள்)


اللَّهُمَّ إِنَّ قُلُوبَ الْمُخْبِتِينَ إِلَيْكَ وَالِهَةٌ وَ سُبُلَ الرَّاغِبِينَ إِلَيْكَ شَارِعَةٌ
இறைவா! பணிவடக்கம் கொண்ட உள்ளங்கள் எல்லாம் உயர்வான உன்னிடமே சரணடைகின்றன, ஆசைகொண்டோரின் பாதைகள் யாவும் உன்னை நோக்கியே உள்ளன.
وَ أَعْلاَمَ الْقَاصِدِينَ إِلَيْكَ وَاضِحَةٌ وَ أَفْئِدَةَ الْعَارِفِينَ مِنْكَ فَازِعَةٌ
மேலும், உன்னை நாட்டம் கொண்டோரின் அடையாளங்கள் தெளிவானவையாகும். உன்னை மெய்ஞானத்தால் அறிய முயல்வோரின் உள்ளங்கள் அச்சத்துடனே உள்ளன.
وَ أَصْوَاتَ الدَّاعِينَ إِلَيْكَ صَاعِدَةٌ وَ أَبْوَابَ الْإِجَابَةِ لَهُمْ مُفَتَّحَةٌ وَ دَعْوَةَ مَنْ نَاجَاكَ مُسْتَجَابَةٌ
பிரார்த்தனை புரிவோரின் சத்தங்கள் உன்னிடத்தில் உயர்ந்துள்ளன. அடியார்களின் வேண்டுதலுக்கு விடையளிக்கும் உனது கதவுகள் திறந்தே உள்ளன. உன்னிடம் இறைஞ்சிக் கேட்போருக்கு விடையளிக்கின்றாய்.
وَ تَوْبَةَ مَنْ أَنَابَ إِلَيْكَ مَقْبُولَةٌ وَ عَبْرَةَ مَنْ بَكَى مِنْ خَوْفِكَ مَرْحُومَةٌ وَ الْإِغَاثَةَ لِمَنِ اسْتَغَاثَ بِكَ مَوْجُودَةٌ
உன்னிடம் தௌபா செய்து மீள்வோரின் மீட்சி அங்கீகரிக்கப்படுகின்றது. உன் மீதான அச்சத்தால் அழுவோரின் கண்ணீருக்கு கருணை காட்டப்படுகின்றது. உன்னிடம் உதவி கேட்டு கூக்குரல் இடுவோருக்கு உதவி செய்யப்படுகின்றது.
وَ الْإِعَانَةَ لِمَنِ اسْتَعَانَ بِكَ مَبْذُولَةٌ وَ عِدَاتِكَ لِعِبَادِكَ مُنْجَزَةٌ
உன்னிடம் உதவிகேட்போருக்கு உனது உதவிக்கரம் என்றுமுண்டு. உனது அடியார்கள் மீதான உனது வாக்குறுதிகள் நிலையானவையாகும்.
وَ زَلَلَ مَنِ اسْتَقَالَكَ مُقَالَةٌ وَ أَعْمَالَ الْعَامِلِينَ لَدَيْكَ مَحْفُوظَةٌ وَ أَرْزَاقَكَ إِلَى الْخَلاَئِقِ مِنْ لَدُنْكَ نَازِلَةٌ
உன்னிடம் மன்னிப்புக் கேட்போரின் தவறுகள் கண்டுகொள்ளப்படுவதில்லை. அமல்களில் ஈடுபடுவோரின் அமல்கள் யாவும் உன்னிடம் பாதுகாப்பாக உள்ளன. படைப்பினங்கள் மீது உனது அருட்கொடைகளும் உணவும் உன்னிடமிருந்து இறங்கியவாறே உள்ளன.
وَ عَوَائِدَ الْمَزِيدِ إِلَيْهِمْ وَاصِلَةٌ وَ ذُنُوبَ الْمُسْتَغْفِرِينَ مَغْفُورَةٌ
அவர்களுக்கு பயனளிக்கும் விடயங்கள் அதிகமாகவே கிடைக்கின்றன, பாவமன்னிப்புக் கேட்போரின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
وَ حَوَائِجَ خَلْقِكَ عِنْدَكَ مَقْضِيَّةٌ وَ جَوَائِزَ السَّائِلِينَ عِنْدَكَ مُوَفَّرَةٌ وَ عَوَائِدَ الْمَزِيدِ مُتَوَاتِرَةٌ
உனது படைப்புக்களின் தேவைகள் உன்னிடத்தில் நிறைவேற்றப்படுகின்றன. கேட்போருக்கான கூலிகள் அனைத்தும் உன்னிடத்தில் அதீதமாகவே உள்ளன. பயனளிக்கும் அனைத்தும் உன்னிடமிருந்து தொடர்ச்சியாகக் கிடைக்கின்றன.
وَ مَوَائِدَ الْمُسْتَطْعِمِينَ مُعَدَّةٌ وَ مَنَاهِلَ الظِّمَاءِ مُتْرَعَةٌ
உணவுகேட்போருக்கான ஆகாரங்கள் தயார் நிலையிலுள்ளன. தாகித்தோருக்கான நீரூற்றுக்களும் நிரம்பியுள்ளன.
اللَّهُمَّ فَاسْتَجِبْ دُعَائِي وَ اقْبَلْ ثَنَائِي وَ اجْمَعْ بَيْنِي وَ بَيْنَ أَوْلِيَائِي‏
இறைவா! எனது பிரார்த்தனையினை அங்கீகரிப்பாயாக! உன்னை புகழ்வதையும் ஏற்றுக்கொள்வாயாக! என்னை உனது நேசர்களோடு சேர்த்துவைப்பாயாக!
بِحَقِّ مُحَمَّدٍ وَ عَلِيٍّ وَ فَاطِمَةَ وَ الْحَسَنِ وَ الْحُسَيْنِ‏
இறைத்தூதர் நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம், அமீருல் முஃமினீன் இமாம் அலீ, அன்னை பாத்திமா, இமாம் ஹஸன் மற்றும் இமாம் ஹுஸைன் ஆகியோரின் பொருட்டினால்
إِنَّكَ وَلِيُّ نَعْمَائِي وَ مُنْتَهَى مُنَايَ وَ غَايَةُ رَجَائِي فِي مُنْقَلَبِي وَ مَثْوَايَ‏
நிச்சயமாக, நீயே எனது அனைத்து அருட்கொடைகளுக்கும் பொறுப்பானவன். நீயே எனது இறுதி ஆசை. நீயே நான் இறுதியாக தங்கும் இடத்திலும், மீளும் இடத்திலும் எனது எதிர்பார்ப்பினதும் நம்பிக்கையினதும் இலக்காவாய்!
(காமிலுஸ் ஜியாரத்தில் இதன் தொடர்ச்சியாக இவ்வாறு வந்துள்ளது)
أَنْتَ إِلَهِي وَ سَيِّدِي وَ مَوْلاَيَ اغْفِرْ لِأَوْلِيَائِنَا وَ كُفَّ عَنَّا أَعْدَاءَنَا وَ اشْغَلْهُمْ عَنْ أَذَانَا
நீயே எனது இறைவனும், தலைவனும், எஜமானனும் ஆவாய். எங்களது தோழர்களை மன்னிப்பாயாக! எங்களது எதிரிகளை எங்களை விட்டும் நீக்கிவிடுவாயாக! எங்களை நோவினை செய்வதைவிட்டும் அவர்களை வழிதிருப்பிவிடுவாயாக!
وَ أَظْهِرْ كَلِمَةَ الْحَقِّ وَ اجْعَلْهَا الْعُلْيَا وَ أَدْحِضْ كَلِمَةَ الْبَاطِلِ وَ اجْعَلْهَا السُّفْلَى إِنَّكَ عَلَى كُلِّ شَيْ‏ءٍ قَدِيرٌ
சத்திய வார்த்தையை வெளிப்படுத்துவாயாக! அதனை மேலோங்கச் செய்வாயாக! அசத்திய வார்த்தையினை அழித்துவிடுவாயாக! மேலும் அதனை மிகவும் இழிவான இடத்தில் வைப்பாயாக! நிச்சயமாக, நீ அனைத்தின் மீதும் ஆற்றல் கொண்டவனாவாய்!

பிறகு இமாம் பாக்கிர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:
'எங்களைப் பின்பற்றும் எங்களது ஷீஆக்களில் யாராவது இந்த ஜியாரத்தினையும் , துஆவினையும் அமீருல் முஃமினீன் அவர்களிடம் அல்லது இமாம்களில் ஒருவரிடம் ஓதினால், இறைவன் இதனை ஓர் ஒளிக்கீற்றாக மேலே கொண்டு செல்கின்றான். மேலும், அதில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் இலச்சினை பொறிக்கப்பட்டு, இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் ஒப்படைக்கப்படும் வரை அது பாதுகாக்கப்படுகின்றது'.
மஸாருல் கபீர் மற்றும் பிஹாருல் அன்வாரில் வந்துள்ளபடி இந்த ஜியாரத் அனைத்து இமாம்களுக்கும் ஓதும்படியான ஓர் பொதுவான ஜியாரத்தும் துஆவும் ஆகும்.

Publications