துஆ இப்திதாஹ்

بسم الله الرحمن الرحيم
துஆ இப்திதாஹ் ; இமாமுஸ்ஸமான் இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களிடமிருந்து ஆதாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட ஓர் பிரார்த்தனையாகும். இமாம் அவர்கள் அதனை தனது ஷீஆக்களுக்கு கற்றுக்கொடுத்தார்கள். இதனை ரமழான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் ஓதும் படி கட்டளையிட்டுள்ளார்கள்.
இப்பிரார்த்தனையினை எப்போதும் ஓதலாம். ஆனால் , ரமழான் இரவுகளில் ஓதுவது மிகவும் சிறப்புக்குறியதாகும்.
இப்பிரார்த்தனையின் பெயர் இப்திதாஹ் ஆகும். இதற்கு இவ்வாறு பெயர் வரக்காரணம் ; இறைவனைப் புகழ்ந்து ஆரம்பிக்கப்படும் வாக்கியம் இதன் ஆரம்பத்தில் அமைந்துள்ளதாகும்.

இப்பிரார்த்தனை மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது:
முதலாம் பகுதி : பிரார்த்தனையின் ஊடாக இறைவனின் புகழினையும் அவனிடம் எவ்வாறு எமது தேவைகளைக் கேட்க வேண்டும் என்றும் , மேலும் இறைஞானத்தினையும் எமக்கு கற்றுத் தரப்பட்டுள்ளது.
இரண்டாம் பகுதி : அஹ்லுல்பைத்தினர் பற்றிய அறிமுகமும் அவர்கள் மீதான ஸலவாத்தினையும் எமக்கு போதிக்கப்படுகின்றது.
மூன்றாம் பகுதி : இறுதி இமாம் , இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களது நீண்ட மறைவும் , அதன் காரணமாக உலகத்தில் ஏற்பட்டுள்ள கஷ்டங்களும் , அவரைப் பின்பற்றுபவர்களின் துன்பங்களும் அவர்களின் எதிரிகளின் அதிகரிப்பு பற்றியும் , இமாம் அவர்களின் வெளிப்பாடுக்கான ஏக்கங்களையும் பிரார்த்தினையினையும் இதில் எமக்கு கற்றுத்தரப்படுகின்றது.

 

 

 

 


بسم الله الرحمن الرحيم
அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
اللهم صل على محمد و آل محمد
இறைவா! நபி முஹம்மது(ஸல்) அவர்கள் மீதும் அவரது குடும்பத்தாரின் மீதும் ஸலவாத் கூறுவாயாக!

اللّهُمَّ إِنِّى أَفْتَتِحُ الثَّناءَ بِحَمْدِكَ
இறைவா! நிச்சயமாக நான் உனது புகழினையும் கீர்த்தியினையும் கொண்டே உனது புகழினை ஆரம்பம் செய்கின்றேன்

وَأَنْتَ مُسَدِّدٌ لِلصَّوابِ بِمَنِّكَ،
நீயே! உனது கிருபையினைக் கொண்டு உனது அடியார்களை நேர்வழியில் உறுதியாக இருக்க வைக்கின்றாய்

وَأَيْقَنْتُ أَنَّكَ أَنْتَ أَرْحَمُ الرَّاحِمِينَ فِى مَوْضِعِ الْعَفْوِ وَالرَّحْمَةِ،
நிச்சயமாக நீ மன்னித்து , அருள் புரிவோரில் மிகவும் கருணையாளன் என்று நான் உறுதியாக நம்பிக்கை கொண்டுள்ளேன்

وَأَشَدُّ الْمُعاقِبِينَ فِى مَوْضِعِ النَّكالِ وَالنَّقِمَةِ،
தண்டனை வழங்கும் நேரத்திலும் பலிதீர்க்கும் தருணத்திலும் நீ மிகவும் கண்டிப்பானவன்

وَأَعْظَمُ الْمُتَجَبِّرِينَ فِى مَوْضِعِ الْكِبْرِياءِ وَالْعَظَمَةِ
உயர் அந்தஸ்திலும் கண்ணியத்திலும் நீ அதியுயர் மகத்தான அந்தஸ்தினை வெளிக்காட்டுகின்றாய்

اللّهُمَّ أَذِنْتَ لِى فِى دُعائِكَ وَمَسْأَلَتِكَ،
இறைவா! உன்னை அழைத்து , உன்னிடம் எனது தேவைகளைக் கேட்க எனக்கு அனுமதியளித்துள்ளாய்

فَاسْمَعْ يَا سَمِيعُ مِدْحَتِى،
செவிமடுப்பவனே! எனது புகழ் உரையினையும் செவிமடுப்பாயாக!

وَأَجِبْ يَا رَحِيمُ دَعْوَتِى،
கருணையாளனே! எனது அழைப்பிற்கு பதிலளிப்பாயாக!

وَأَقِلْ يَا غَفُورُ عَثْرَتِى،
மன்னிப்பவனே! எனது தவறுகளையும் பாவங்களையும் மன்னிப்பாயாக!

فَكَمْ يَا إِلهِى مِنْ كُرْبَةٍ قَدْ فَرَّجْتَها،
என் இறைவா! எத்தனை துன்பங்களைப் போக்கி அதனை மகிழ்ச்சியாக மாற்றியுள்ளாய்

وَهُمُومٍ قَدْ كَشَفْتَها،
கவலைகளை தூரப்படுத்தியுள்ளாய்

وَعَثْرَةٍ قَدْ أَقَلْتَها،
தவறுகளையும் பாவங்களையும் மன்னித்துள்ளாய்

وَرَحْمَةٍ قَدْ نَشَرْتَها،
அன்பு எனும் அருட்கொடையினை பரப்பிவிட்டாய்
وَحَلْقَةِ بَلاءٍ قَدْ فَكَكْتَها،
மேலும் துன்பம் எனும் முடிச்சினை அவிழ்த்துவிட்டாய்

الْحَمْدُ لِلّهِ الَّذِى لَمْ يَتَّخِذْ صاحِبَةً وَلَا وَلَداً
துணையும் பிள்ளைகளையும் தெரிவுசெய்யாத அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்


وَلَمْ يَكُنْ لَهُ شَرِيكٌ فِى الْمُلْكِ
ஆட்சி அதிகாரத்தில் அவனுக்கு இணையாருமில்லை

وَلَمْ يَكُنْ لَهُ وَ لِيٌّ مِنَ الذُّلّ
தேவைகளை நிவர்த்திசெய்ய தனக்கு உதவியாளனை தெரிவுசெய்யாதவன்

وَكَبِّرْهُ تَكْبِيراً؛
அவனது உயர்வைக் கொண்டு தக்பீர் உரைக்க வேண்டும்

الْحَمْدُ لِلّهِ بِجَمِيعِ مَحامِدِهِ كُلِّها،
அவனது புகழுக்குறிய அனைத்து பண்புகளைக் கொண்டும் எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே!


عَلَى جَمِيعِ نِعَمِهِ كُلِّها
அவன் வழங்கிய அனைத்து அருட்கொடைகளுக்காக வேண்டியும்

الْحَمْدُ لِلّهِ الَّذِى لَامُضادَّ لَهُ فِى مُلْكِهِ،
ஆட்சி அதிகாரத்தில் இணையில்லா அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்

وَلَا مُنازِعَ لَهُ فِى أَمْرِهِ
மேலும் அவனது செயல்களில் அவனை எதிர்க்க யவருமில்லை

الْحَمْدُ لِلّهِ الَّذِى لَاشَرِيكَ لَهُ فِى خَلْقِهِ،
படைப்பதில் தனக்கு இணையில்லாத அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும்

وَلَا شَبِيهَ لَهُ فِى عَظَمَتِهِ
உயர் அந்தஸ்தில் அவனைப் போல் யாருமே இல்லை

الْحَمْدُ لِلّهِ الْفاشِى فِى الْخَلْقِ أَمْرُهُ وَحَمْدُهُ،
அவனது புகழும் அவனது கட்டளைகளும் அவனின் படைப்புக்களில் வெளிப்பாட்டிலுள்ள அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும்

الظَّاهِرِ بِالْكَرَمِ مَجْدُهُ،
அவனது கீர்த்தியாவும் அவனது கொடையின் மூலம் வெளிப்பட்டுவிட்டன

الْباسِطِ بِالْجُودِ يَدَهُ، الَّذِى لَاتَنْقُصُ خَزائِنُهُ،
படைப்பினங்களுக்கு கொடுக்கும் விசாலமான கைகளுடையவன், கொடுப்பதினால் அவனது அருள் நிறைந்த பொக்கிஷங்கள் குறைவடைவதில்லை.
وَلَا تَزِيدُهُ كَثْرَةُ الْعَطاءِ إِلّا جُوداً وَكَرَماً إِنَّهُ هُوَ الْعَزِيزُ الْوَهَّابُ .
அதிகமாக கொடுப்பதினால் அவனது கொடைதன்மையைத் தவிர வேறு எதுவும் அதிகரிப்பதில்லை. நிச்சயமாக அவன் கண்ணியமிக்கவனும் , அதிகமாக கொடைகொடுப்பவனுமாவான்.
اللّٰهُمَّ إِنِّى أَسْأَلُكَ قَلِيلاً مِنْ كَثِيرٍ، مَعَ حاجَةٍ بِى إِلَيْهِ عَظِيمَةٍ
இறைவா! நான் உன்னிடம் எனது தேவைகளில் சிலவற்றை வேண்டுகின்றேன், அவைகளில் நான் மிகவும் தேவையுள்ளவனாக உள்ளேன்.
وَغِناكَ عَنْهُ قَدِيمٌ وَهُوَ عِنْدِى كَثِيرٌ، وَهُوَ عَلَيْكَ سَهْلٌ يَسِيرٌ؛
நீயோ அந்தத் தேகைளை விட்டும் எப்போதும் தேவையற்றவனாவாய், அந்த குறைவான தேவையோ என்னிடம் மிக அதிகமாகும் , அதுவே உனக்கு மிகவும் இலகுவானதும் எவ்வித கஷ்டங்களுமற்றதாகும்.

اللّٰهُمَّ إِنَّ عَفْوَكَ عَنْ ذَنْبِى،
இறைவா! நிச்சயமாக எனது பாவங்களை மன்னித்த உனது மன்னிக்கும் பண்பும் ,
وَتَجاوُزَكَ عَنْ خَطِيئَتِى، وَصَفْحَكَ عَنْ ظُلْمِى، وَسَتْرَكَ عَلَىٰ قَبِيحِ عَمَلِى،
எனது தவறுகளை மன்னித்த உனது பண்பும், எனது அநீதிகளை நீ கணக்கெடுக்கவில்லை , எனது அசிங்கமான செயல்களை நீ மூடி மறைத்தாய்.
وَحِلْمَكَ عَنْ كَثِيرِ جُرْمِى عِنْدَ مَا كانَ مِنْ خَطَإى وَعَمْدِى
அறிந்தோ , அறியாமலோ நான் செய்த அதிகமான பாவங்களை பொறுத்துக்கொண்டு பொறுமையாய் இருந்தாய்
أَطْمَعَنِى فِى أَنْ أَسْأَلَكَ مَا لَاأَسْتَوْجِبُهُ مِنْكَ
உனது அனைத்து பரிபூரண பண்புகளும் எனது தேவைகளை உன்னிடம் கேட்கும் படி எனது ஆசையினை தூண்டிவிட்டது , அவைகளுக்கு நான் பொறுத்தமில்லாதவன் ஆவேன்.
الَّذِى رَزَقْتَنِى مِنْ رَحْمَتِكَ، وَأَرَيْتَنِى مِنْ قُدْرَتِكَ،
உனது அருளிலிருந்து எனக்கு அருள்புரிந்தாய்! உனது சக்தியினை எனக்கு காண்பித்தாய்!
وَعَرَّفْتَنِى مِنْ إِجابَتِكَ،
மேலும் நான் உன்னிடம் கேட்ட தேவைகளை நிறைவேற்றி உன்னைப் பற்றிய அறிவினைத் தந்தாய்!

فَصِرْتُ أَدْعُوكَ آمِناً، وَأَسْأَلُكَ مُسْتَأْنِساً لَاخائِفاً وَلَا وَجِلاً، مُدِلّاً عَلَيْكَ فِيما قَصَدْتُ فِيهِ إِلَيْكَ،
பூரண மன அமைதியோடு உன்னை அழைத்தேன் , எவ்வித பயமோ, தயக்கமோ இன்றி உன்னிடம் எனது தேவைகளை கேட்டேன், உன்னிடம் கேட்கின்றதை மிகவும் பண்பாகவும் மென்மையாகவும் கேட்கின்றேன்.
فَإِنْ أَبْطَأَ عَنِّى عَتَبْتُ بِجَهْلِى عَلَيْكَ،
நீ எனது தேவைகளை காலம் தாழ்த்தி நிறைவேற்றினால் எனது அறியாமையால் உன்னை நான் முறையிடுகின்றேன்.
وَلَعَلَّ الَّذِى أَبْطَأَ عَنِّى هُوَ خَيْرٌ لِى لِعِلْمِكَ بِعاقِبَةِ الْأُمُورِ،
நீ எனது தேவைகளை நிறைவேற்றுவதை பிற்படுத்துவது எனக்கு சிறந்ததாக இருக்கலாம் , ஏனெனில் நீயே அனைத்து விடயங்களின் இறுதி நிலையினை அறிந்துள்ளாய்!.
فَلَمْ أَرَ مَوْلىً كَرِيماً أَصْبَرَ عَلَى عَبْدٍ لَئِيمٍ مِنْكَ عَلَىَّ،
இவ்வனைத்து பண்புகளோடும் தனது இழிவான அடிமையோடு பொறுமையாக நடந்துகொள்ளும் எந்ததோர் எஜமானையும் நான் கண்டதில்லை.
يَا رَبِّ، إِنَّكَ تَدْعُونِى فَأُوَلِّى عَنْكَ،
என் இரட்சகா! நீ என்னை அழைக்கின்றாய் - நானோ உன்னை விட்டும் எனது முகத்தினை திருப்புகின்றேன்.
وَتَتَحَبَّبُ إِلَىَّ فأَتَبَغَّضُ إِلَيْكَ،
நீ என் மீது அன்பு காட்டுகின்றாய் - நானோ எனது பாவச் செயல்களால் உனக்கு மாறுசெய்கின்றேன்.
وَتَتَوَدَّدُ إِلَىَّ فَلَا أَقْبَلُ مِنْكَ كَأَنَّ لِىَ التَّطَوُّلَ عَلَيْكَ؛
நீ என்னோடு நற்புக்கொள்ள முன்னோக்கி வருகின்றாய் - நானோ அதனை ஏற்றுக்கொள்கின்றேனில்லை, ஏதோ நான் உனக்கு அருள்செய்வது போல்...
فَلَمْ يَمْنَعْكَ ذٰلِكَ مِنَ الرَّحْمَةِ لِى وَالْإِحْسانِ إِلَىَّ،
எனது இந்த அனைத்து செயல்களும் உனது அருளும் நன்மையும் எனக்கு வந்தடைவதினை தடுக்கவில்லை.
وَالتَّفَضُّلِ عَلَىَّ بِجُودِكَ وَكَرَمِكَ،
உனது அருளினாலும் கொடையினாலும் எனக்கு அதிகமாகவே தருகின்றாய்.
فَارْحَمْ عَبْدَكَ الْجاهِلَ وَجُدْ عَلَيْهِ بِفَضْلِ إِحْسانِكَ إِنَّكَ جَوادٌ كَرِيمٌ
உனது இந்த அறிவிலியான அடிமை மீது கருணைகாட்டுவாயாக! உனது அருளிலிருந்தும் நலவுகளிலிருந்தும் அவனுக்கு கொடுப்பாயாக! நிச்சயமாக நீ கொடையாளனும் அருள்பாளிப்பனுமாவாய்.
. الْحَمْدُ لِلّٰهِ مالِكِ الْمُلْكِ، مُجْرِى الْفُلْكِ، مُسَخِّرِ الرِّياحِ، فالِقِ الْإِصْباحِ، دَيَّانِ الدِّينِ، رَبِّ الْعالَمِينَ .
புகழனைத்தும் அரசாட்சி செய்யும் அல்லாஹ்விற்கே! அவன் கப்பல்களை நகரவைப்பவன் , காற்றினை பல கோணங்களில் திருப்புபவன் , அவனே பொழுதினை விடியச்செய்கின்றான் , அவனே தீர்ப்புநாளின் அதிபதி , அவனே உலகத்தாரின் இரட்சகன்.
الْحَمْدُ لِلّٰهِ عَلىٰ حِلْمِهِ بَعْدَ عِلْمِهِ،
புகழனைத்தும் தனது அடியார்களின் தவறுகளை அறிந்தும் அதனை பொறுமையாக சகித்துக் கொள்ளும் அல்லாஹ்விற்கே!
وَالْحَمْدُ لِلّٰهِ عَلَىٰ عَفْوِهِ بَعْدَ قُدْرَتِهِ،
புகழனைத்தும் பாவிகளை தண்டிக்கும் சக்தியிருந்தும் அவர்களை மன்னிக்கும் அல்லாஹ்விற்கே!
وَالْحَمْدُ لِلّٰهِ عَلَىٰ طُولِ أَناتِهِ فِى غَضَبِهِ وَهُوَ قادِرٌ عَلَىٰ مَا يُرِيدُ
புகழனைத்தும் கோபமான நிலையிலும் நீண்ட பொறுமையைக் கொண்ட அல்லாஹ்விற்கே! அவன் நினைத்ததை முடிக்கும் ஆற்றல் கொண்டவன்.
الْحَمْدُ لِلّٰهِ خالِقِ الْخَلْقِ، باسِطِ الرِّزْقِ،
புகழனைத்தும் படைப்பினங்களை படைத்த அல்லாஹ்விற்கே! அவன் உணவினையும் விசாலப்படுத்தியுள்ளான்.
فالِقِ الْإِصْباحِ، ذِى الْجَلالِ وَالْإِكْرامِ
அவன் பொழுதினையும் விடியச் செய்கின்றான் , அவனே வல்லமைக்கும் கண்ணியத்திற்கும் உரிமையாளன்.
وَالْفَضْلِ وَالْإِنْعامِ ، الَّذِى بَعُدَ فَلا يُرىٰ، وَقَرُبَ فَشَهِدَ النَّجْوىٰ، تَبارَكَ وَتَعالىٰ .
பார்வைக்கு தெண்படாத அவனே கொடைக்கும் நலவுகளுக்கும் சொந்தக்காரன் , அனைவரை விடவும் மிகவும் நெருக்கமான அவனே அனைத்து இரகசியங்களையும் அறிந்தவன் , அவனே மிக பாக்கியவானும் வல்லமையுடையவனுமாவான்.
الْحَمْدُ لِلّٰهِ الَّذِى لَيْسَ لَهُ مُنازِعٌ يُعادِلُهُ، وَلَا شَبِيهٌ يُشاكِلُهُ،
புகழனைத்தும் அல்லாஹ்விற்கே! அவனுக்கு எதிராக யாருமில்லை , அவனைப் போன்றும் யாருமில்லை.

وَلَا ظَهِيرٌ يُعاضِدُهُ، قَهَرَ بِعِزَّتِهِ الْأَعِزَّاءَ،
அவனுக்கு பக்கபலமாய் உதவக்கூடியவருமில்லை , கண்ணியம் நிறைந்தோர் யாவரும் அவனது கண்ணியத்திற்கு முன்பு யாதுமற்றவர்கள்.
وَتَواضَعَ لِعَظَمَتِهِ الْعُظَماءُ، فَبَلَغَ بِقُدْرَتِهِ مَا يَشاءُ؛
உயர்ந்தோர் யாவரும் அவனுக்கு முன்பு பணிவாவ நடந்து கொள்கின்றனர் , அவனது சக்தியினால் நினைக்கும் அனைத்தினையும் நிறைவேற்றுகின்றவன்.
الْحَمْدُ لِلّٰهِ الَّذِى يُجِيبُنِى حِينَ أُنادِيهِ،
புகழனைத்தும் அவனை அழைத்தால் எனது குரலுக்கு பதிலளிக்கின்ற அல்லாஹ்விற்கே!
وَيَسْتُرُ عَلَىَّ كُلَّ عَوْرَةٍ وَأَنَا أَعْصِيهِ،
நான் அவனுக்கு மாறு செய்து பாவங்களில் ஈடுபட்டாலும் அவன் எனது குறைகளை மறைக்கின்றான்.
وَيُعَظِّمُ النِّعْمَةَ عَلَىَّ فَلَا أُجازِيهِ،
எனக்கு மிகப் பெரும் அருட்கொடைகளை வழங்குகின்றான் ,நானோ அவனுக்கு நன்றி செலுத்துவதில்லை.
فَكَمْ مِنْ مَوْهِبَةٍ هَنِيئَةٍ قَدْ أَعْطانِى،
எனக்கு எத்தனை அழகிய அன்பளிப்புக்களை தந்துள்ளான்,
وَعَظِيمَةٍ مَخُوفَةٍ قَدْ كَفانِى،
ஏன்னை விட்டும் எத்தனை ஆபத்துக்களை தடுத்துள்ளான்.

وَبَهْجَةٍ مُونِقَةٍ قَدْ أَرانِى، فَأُثْنِى عَلَيْهِ حامِداً، وَأَذْكُرُهُ مُسَبِّحاً .
ஆச்சரியமூட்டும் சந்தோஷங்களை எனக்கு காண்பித்துள்ளான் , எனவே அவனை நான் புகழ்கின்றேன் , அனைத்து குறைகளையும் விட்டு தூய்மையானவனாக அவனை நான் ஞாபகப்படுத்துகின்றேன்.
الْحَمْدُ لِلّٰهِ الَّذِى لَايُهْتَكُ حِجابُهُ، وَلَا يُغْلَقُ بابُهُ،
புகழனைத்தும் அல்லாஹ்விற்கே! அவனிட்ட திரைகளை யாரும் நீக்கியதில்லை, அவனது இல்லக் கதவுகளும் யாருக்கும் மூடப்படுவதுமில்லை.
وَلَا يُرَدُّ سائِلُهُ، وَلَا يُخَيَّبُ آمِلُهُ
கேட்டவர்கள் யாரும் அவனிடமிருந்து வெறும் கையோடு திறும்பியதில்லை , அவன் மீது நம்பிக்கை கொண்டு எதிர்பார்த்திருப்போர் ஒருபோதும் ஏமாற்றமடையமாட்டார்கள்.
الْحَمْدُ لِلّٰهِ الَّذِى يُؤْمِنُ الْخائِفِينَ، وَيُنَجِّى الصَّالِحِينَ ،
புகழனைத்தும் அல்லாஹ்விற்கே! அச்சமுள்ளோருக்கு அபயமளிக்கின்றான் , நல்லோரை வெற்றிபெறச் செய்கின்றான்.
وَيَرْفَعُ الْمُسْتَضْعَفِينَ، وَيَضَعُ الْمُسْتَكْبِرِينَ،
பலவீனமானோரை அந்தஸ்தில் உயர்த்துகின்றான் , பெருமையுள்ளோரை தாழ்த்துகின்றான் .
وَيُهْلِكُ مُلُوكاً وَيَسْتَخْلِفُ آخَرِينَ،
அரசர்களை அழிக்கின்றான் , அவர்களது இடத்தில் பிறரை அமர்த்துகின்றான்

وَالْحَمْدُ لِلّٰهِ قاصِمِ الْجَبَّارِينَ، مُبِيرِ الظَّالِمِينَ،
புகழனைத்தும் அல்லாஹ்விற்கே! அவன் அடக்கியாள்வோரை அழிக்கின்றான் , அநியாயக்காரர்களை இல்லாமல் செய்கின்றான் .
مُدْرِكِ الْهارِبِينَ، نَكالِ الظَّالِمِينَ،
விரண்டோடுபவர்களுக்கு அடைக்கலம் அளிக்கின்றான் , அநியாயக்காரர்களுக்கு தண்டனை வழங்குகின்றான் .
صَرِيخِ الْمُسْتَصْرِخِينَ، مَوْضِعِ حاجاتِ الطَّالِبِينَ، مُعْتَمَدِ الْمُؤْمِنِينَ .
உதவி வேண்டி குரல் கொடுப்போருக்கு உதவுகின்றான் , தேவையுடையோர் தமது தேவைகளை முறையிடும் இடம் அவன் , நம்பிக்கையுடையோரின் முழு நம்பிக்கை அவன்.
الْحَمْدُ لِلّٰهِ الَّذِى مِنْ خَشْيَتِهِ تَرْعَدُ السَّماءُ وَسُكَّانُها،
புகழனைத்தும் அல்லாஹ்விற்கே! வானமும் அதிலுள்ளளோரும் அவன் மீதான அச்சத்தில் கதருகின்றனர்.
وَتَرْجُفُ الْأَرْضُ وَعُمَّارُها، وَتَمُوجُ الْبِحارُ وَمَنْ يَسْبَحُ فِى غَمَراتِها؛
பூமியும் அதிலுள்ளோரும் நடுங்குகின்றனர் , கடலும் அதன் ஆழத்தில் நீந்துபவர்களும் ஆட்டம் காண்கின்றனர்.
الْحَمْدُ لِلّٰهِ الَّذِى هَدانا لِهٰذا وَمَا كُنَّا لِنَهْتَدِىَ لَوْلَا أَنْ هَدَانا اللّٰهُ .
புகழனைத்தும் அல்லாஹ்விற்கே! அவனே எங்களை இந்த நேர்வழிக்கு வழிகாட்டினான் , அவன் எங்களுக்கு வழிகாட்டவில்லையேல் எங்களால் இதனை அடைந்திருக்க முடியாது.

الْحَمْدُ لِلّٰهِ الَّذِى يَخْلُقُ وَلَمْ يُخْلَقْ، وَيَرْزُقُ وَلَا يُرْزَقُ، وَيُطْعِمُ وَلَا يُطْعَمُ،
புகழனைத்தும் அல்லாஹ்விற்கே! அவனே அனைவரையும் படைத்தான் ஆனால் அவன் படைக்கப்படவில்லை , அவனே அனைவருக்கும் அருள் புரிகின்றான் ஆனால் அவன் அருள் புரியப்;படுவதில்லை , அவனே அனைவருக்கும் உணவளிக்கின்றான் ஆனால் அவன் உணவளிக்கப்படுவதில்லை.
وَيُمِيتُ الْأَحْياءَ، وَيُحْيِى الْمَوْتىٰ، وَهُوَ حَيٌّ لَايَمُوتُ، بِيَدِهِ الْخَيْرُ، وَهُوَ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ
உயிரோடு உள்ளவர்களை மரணிக்கச் செய்கின்றான் , மரணித்தவர்களை உயிர்ப்பிக்கின்றான் , அவன் மரணமற்ற நிரந்தரமாக உயிரோடுள்ளவன், அவனிடமே அனைத்து நலவுகளுமுண்டு , அவனே அனைத்து விடயங்களிலும் ஆற்றல் கொண்டவன்.
اللّٰهُمَّ صَلِّ عَلَىٰ مُحَمَّدٍ عَبْدِكَ وَرَسُولِكَ وَأَمِينِكَ وَصَفِيِّكَ وَحَبِيبِكَ وَخِيَرَتِكَ مِنْ خَلْقِكَ، وَحافِظِ سِرِّكَ، وَمُبَلِّغِ رِسالاتِك
இறைவா! உனது அடியாரும், உனது தூதரும், உனது நம்பிக்கையாளரும் , நீ தெரிவு செய்தவரும் , உனது நேசத்துக்குறியவரும் , உனது படைப்பில் மிகவும் சிறந்தவரும்,உனது இரகசியங்களின் பாதுகாவலரும், உனது தூதினை எத்திவைத்தவருமான நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் கூறுவாயாக!
أَفْضَلَ وَأَحْسَنَ وَأَجْمَلَ وَأَكْمَلَ وَأَزْكىٰ وَأَنْمىٰ وَأَطْيَبَ وَأَطْهَرَ وَأَسْنىٰ
மிகவும் சிறப்பான, மிகவும் அழகான , பரிபூரணமான , மிகவும் தூய்மையான , மிகவும் அருள்நிறைந்த, மிகவும் நறுமணம் வீசக்கூடிய, மிகவும் சுத்தமான, மிகவும் உயர்வான...
وَأَكْثَرَ مَا صَلَّيْتَ وَبارَكْتَ وَتَرَحَّمْتَ وَتَحَنَّنْتَ وَسَلَّمْتَ عَلَىٰ أَحَدٍ مِنْ عِبادِكَ وَأَ نْبِيائِكَ وَرُسُلِكَ وَصِفْوَتِكَ وَأَهْلِ الْكَرامَةِ عَلَيْكَ مِنْ خَلْقِكَ
மேலும் , உனது நபிமார்களில், உனது தூதர்களில் , உன்னால் தேர்வுசெய்யப்பட்டவர்களில் , உனது சங்கைக்கு உரித்தான உனது படைப்புக்களில் மத்தியில் அவர்களுக்கு ஸலவாத்தைவிட , அருள்புரிந்ததைவிட , கருணைகாட்டியதைவிட, ஸலாம் கூறியதைவிட விட அதிகமாக நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் மீது அனைத்தினையும் செய்வாயாக!
اللّٰهُمَّ وَصَلِّ عَلَىٰ عَلِيٍّ أَمِيرِ الْمُؤْمِنِينَ، وَوَصِيِّ رَسُولِ رَبِّ الْعالَمِينَ،
இறைவா! அமீருல் முஃமினீன் இமாம் அலீ அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீது ஸலவாத் கூறுவாயாக! அவர் உலக இரட்சகனின் தூதரின் பிரதிநிதியாவார்.
عَبْدِكَ وَوَ لِيِّكَ وَأَخِي رَسُولِكَ وَحُجَّتِكَ عَلَىٰ خَلْقِكَ، وَآيَتِكَ الْكُبْرىٰ، وَالنَّبَاَ الْعَظِيمِ،
அவர் உனது அடியாரும், உன்னால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளரும், உனது தூதரின் சகோதரரும் , உனது படைப்புக்கள் மீதான அத்தாட்சியும் வழிகாட்டியும் , உனது மிகப் பெரிய அடையாளமும் , மிகப்பெரும் செய்தியுமாவார்.
وَصَلِّ عَلَى الصِّدِّيقَةِ الطَّاهِرَةِ فاطِمَةَ سَيِّدَةِ نِساءِ الْعالَمِينَ،
உண்மையாளரும், பரிசுத்தமானவருமான, உலக பெண்களின் தலைவியுமான அன்னை பாத்திமா ஸலாமுல்லாஹ் அலைஹா அவர்கள் மீதும் ஸலவாத் கூறுவாயாக!

وَصَلِّ عَلَىٰ سِبْطَىِ الرَّحْمَةِ، وَ إِمامَىِ الْهُدىٰ الْحَسَنِ وَالْحُسَيْنِ سَيِّدَيْ شَبابِ أَهْلِ الْجَنَّةِ،
அருட்கொடையான உனது தூதரின் இரு பேரர்களும்; , நேர்வழியினைக் காட்டும் இமாம்களும் , சுவனத்து வாலிபர்களின் தலைவர்களுமான இமாம் ஹஸன் , இமாம் ஹுஸைன் அலைஹிமுஸ்ஸலாம் ஆகிய இருவர் மீதும் ஸலவாத் கூறுவாயாக!
وَصَلِّ عَلَىٰ أَئِمَّةِ الْمُسْلِمِينَ؛ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ، وَمُحَمَّدِ بْنِ عَلِيٍّ، وَجَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، وَمُوسَى بْنِ جَعْفَرٍ، وَعَلِيِّ بْنِ مُوسىٰ، وَمُحَمَّدِ بْنِ عَلِيٍّ، وَعَلِيِّ بْنِ مُحَمَّدٍ، وَالْحَسَنِ بْنِ عَلِيٍّ، وَالْخَلَفِ الْهادِي الْمَهْدِيِّ،
மேலும் முஸ்லிம்களின் இமாம்களான ; அலீ பின் ஹுஸைன் , முஹம்மது பின் அலீ , ஜஃபர் பின் முஹம்மது , மூஸா பின் ஜஃபர், அலீ பின் மூஸா , முஹம்மது பின் அலீ , அலீ பின் முஹம்மது , ஹஸன் பின் அலீ மேலும் நேர்வழிகாட்டுபவரும் இமாம்களின் வாரிசுமான இமாம் மஹ்தீ அலைஹிமுஸ்ஸலாம் ஆகியோர் மீதும் ஸலவாத் கூறுவாயாக!
حُجَجِكَ عَلَىٰ عِبادِكَ، وَأُمَنائِكَ فِى بِلادِكَ صَلاةً كَثِيرَةً دائِمَةً؛
இவர்கள் உனது அடியார்கள் மீதான அத்தாட்சியும் வழிகாட்டியுமாவார்கள், உனது பூமியில் உனது நம்பிக்கையாளர்கள் இவர்கள், இவர்கள் மீது நிரந்தரமான அதிகமான ஸலவாத்தினைக் கூறுவாயாக!
اللّٰهُمَّ وَصَلِّ عَلَىٰ وَليِّ أَمْرِكَ الْقائِمِ الْمُؤَمَّلِ، وَالْعَدْلِ الْمُنْتَظَرِ،
இறைவா! உனது கட்டளைகளை அமுல்படுத்தக்கூடிய , உன்;னால் நியமிக்கப்பட்ட பாதுகாவலருமான , அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நீதியினை நிலைநாட்டவுள்ள இமாம் அவர்கள் மீது உனது ஸலவாத்தைக் கூறுவாயாக!
وَحُفَّهُ بِمَلائِكَتِكَ الْمُقَرَّبِينَ، وَأَيِّدْهُ بِرُوحِ الْقُدُسِ يَا رَبَّ الْعالَمِينَ .
உனது மிக நெருக்கமான மலக்குகளை அவரோடு இணைத்துவிடு , உலகைப் படைத்து பரிபாலிக்கும் இரட்சகனே! ரூஹுல் குத்ஸை அவருக்கு பணிவிடை செய்பவராக ஆக்குவாயாக!
اللّٰهُمَّ اجْعَلْهُ الدَّاعِىَ إِلىٰ كِتابِكَ، وَالْقائِمَ بِدِينِكَ،
இறைவா! உனது வேதத்தின் பக்கம் மக்களை அழைக்கும் பணியை அவர் ஆரம்பிக்க அருள் செய்வாயாக! உனது மார்க்கத்தினையும் நிலைநாட்ட அவருக்கு உதவுவாயாக!
اسْتَخْلِفْهُ فِى الْأَرْضِ كَمَا اسْتَخْلَفْتَ الَّذِينَ مِنْ قَبْلِهِ،
அவரது முன்னோரை நீ எவ்வாறு உனது பிரதிநிதிகளாக பூமியில் வைத்திருந்தாயோ அவ்வாறே அவரையும் உனது பிரதிநிதியாகவும் கலீபாவாகவும் பூமியில் ஆக்குவாயாக!
مَكِّنْ لَهُ دِينَهُ الَّذِى ارْتَضَيْتَهُ لَهُ،
உனது திருப்திக்குள்ளான அவரது மார்க்கத்தினை நிலைநிருத்த அவருக்கு உதவுவாயாக!
أَبْدِلْهُ مِنْ بَعْدِ خَوْفِهِ أَمْناً،
இத்தனை காலங்களுக்குப் பின்னால் அவரது அச்சத்தினை அவரது பாதுகாப்பாக மாற்றியமைப்பாயாக!
يَعْبُدُكَ لَايُشْرِكُ بِكَ شَيْئاً
அவர் உன்னை மாத்திரமே வணங்குகின்றார் , உனக்கு இணைவைப்பதில்லை.

اللّٰهُمَّ أَعِزَّهُ وَأَعْزِزْ بِهِ، وَانْصُرْهُ وَانْتَصِرْ بِهِ، وَانْصُرْهُ نَصْراً عَزِيزاً،
இறைவா! இமாம் அவர்களை கண்ணியப்படுத்துவாயாக! அவர் மூலம் எங்களுக்கும் கண்ணியத்தினைத் தருவாயாக! ,அவருக்கு உதவி செய்வாயாக! அவர் மூலம் எங்களுக்கும் உதவிடுவாயாக! , வெற்றியடைந்தவராக பரிபூரண உதவியினை அவருக்கு வழங்குவாயாக!
وَافْتَحْ لَهُ فَتْحاً يَسِيراً، وَاجْعَلْ لَهُ مِنْ لَدُنْكَ سُلْطاناً نَصِيراً .
இலகுவாக வெற்றிபெறும் பாக்கியத்தினை அவருக்கு வழங்குவாயாக! , உனது சார்பாக ஆட்சிபுரிவதற்கு அவருக்கு சக்தியினையும் ஆட்சியினையும் வழங்குவாயாக!
اللّٰهُمَّ أَظْهِرْ بِهِ دِينَكَ وَسُنَّةَ نَبِيِّكَ حَتَّىٰ لَايَسْتَخْفِىَ بِشَىْءٍ مِنَ الْحَقِّ مَخافَةَ أَحَدٍ مِنَ الْخَلْقِ .
இறைவா! உனது வழிமுறையினையும் உனது தூதரின் வழிமுறையையும் அவர் மூலம் வெளிப்படுத்துவாயாக! அதன் மூலம் உண்மையும் சத்தியமும் படைப்புக்கள் யாவருக்கும் எவ்வித பயமுமின்றி வெளிப்பட வைத்திடுவாயாக!
اللّٰهُمَّ إِنَّا نَرْغَبُ إِلَيْكَ فِى دَوْلَةٍ كَرِيمَةٍ تُعِزُّ بِهَا الْإِسْلامَ وَأَهْلَهُ،
وَتُذِلُّ بِهَا النِّفاقَ وَأَهْلَهُ
இறைவா! மிகவும் ஆசையாகவும் பணிவுடனும் உனது சங்கைமிகு ஆட்சியினை வேண்டி நிற்கின்றோம் , அதன் மூலம் இஸ்லாத்தினையும் அதை சார்ந்தோரையும் கண்ணியப்படுத்துவாயாக! ,அதன் மூலம் நயவஞ்சகத்தையும் அதை சார்ந்தோரையும் இழிவுபடுத்துவாயாக!

وَتَجْعَلُنا فِيها مِنَ الدُّعاةِ إِلَىٰ طاعَتِكَ، وَالْقادَةِ إِلىٰ سَبِيلِكَ،
அவ்வாட்சியில் உனது கட்டளைகளை நிறைவேற்றுவதன் பக்கம் மக்களை அழைப்பவர்களாக எங்களை ஆக்குவாயாக! , மேலும் நேர்வழியில் பயணித்த உனது பிரதிநிதிகளின் பாதையில் எங்களை பயணிக்கச் செய்வாயாக!
وَتَرْزُقُنا بِها كَرامَةَ الدُّنْيا وَالْآخِرَةِ؛
அதன் மூலம் இம்மையிலும் மறுமையிலும் எங்களுக்கு சங்கையினைத் தருவாயாக!
اللّٰهُمَّ مَا عَرَّفْتَنا مِنَ الْحَقِّ فَحَمِّلْناهُ، وَمَا قَصُرْنا عَنْهُ فَبَلِّغْناهُ
இறைவா! நீ எங்களுக் சத்தியத்திலிருந்து விளங்கவைத்ததை நடைமுறைப்படுத்தும் சக்தியினையும் தருவாயாக! மேலும் நாங்கள் அறியாத விடயங்களையும் எங்களுக்கு தெரியப்படுத்துவாயாக!
اللّٰهُمَّ الْمُمْ بِه شَعَثَنا ، وَاشْعَبْ بِهِ صَدْعَنا ، وَارْتُقْ بِهِ فَتْقَنا، وَكَثِّرْ بِهِ قِلَّتَنا،
இறைவா! காலத்தின் இமாமின் பரகத்தினால் எங்களை ஒற்றுமைப் படுத்துவாயாக! , பிளவுபட்டிருக்கும் எங்களது விடயங்களை ஒன்று சேர்ப்பாயாக! , எங்களது பிரிவுகள் அனைத்தையும் ஒற்றுமையாக்குவாயாக! , எங்களது குறைந்த எண்ணிக்கையை அதிகரிப்பாயாக!
وَأَعْزِزْ بِهِ ذِلَّتَنا، وَأَغْنِ بِهِ عائِلَنا، وَاقْضِ بِهِ عَنْ مُغْرَمِنا،
அவர் மூலம் எங்களது இழிநிலையை கண்ணியமாக மாற்றிடுவாயாக! , அவர் மூலம் எங்களது தேவைகளை தேவையற்றதாக மாற்றிடுவாயாக! , அவரின் பரகத்தின் மூலம் எங்களது கடன்களை நிறைவேற்றிடுவாயாக!

وَاجْبُرْ بِهِ فَقْرَنا، وَسُدَّ بِهِ خَلَّتَنا، وَيَسِّرْ بِهِ عُسْرَنا، وَبَيِّضْ بِهِ وُجُوهَنا، وَفُكَّ بِهِ أَسْرَنا،
அவர் மூலம் எங்களது ஏழ்மையை நீக்கிடுவாயாக! , எங்களது குறைகளை நீக்கிடுவாயாக! , எங்களது கஷ்டங்களை இலகுபடுத்துவாயாக! , அவர் மூலம் எங்களது முகங்களை கண்ணியம் நிறைந்ததாக ஆக்குவாயாக! , எங்களது கைதிகளை அவர் மூலம் எதிரிகளிடமிருந்து விடுதலை செய்வாயாக!
وَأَنْجِحْ بِهِ طَلِبَتَنا، وَأَنْجِزْ بِهِ مَواعِيدَنا، وَاسْتَجِبْ بِهِ دَعْوَتَنا،
எங்களது தேவைகளை நிறைவேற்றுவாயாக! , நீ வாக்களித்தவற்றை நிறைவேற்றுவாயாக! , அவரின் பரகத்தினால் எங்களது பிரார்த்தனைகளை அங்கீகரிப்பாயாக!
وَأَعْطِنا بِهِ سُؤْلَنا، وَبَلِّغْنا بِهِ مِنَ الدُّنْيا وَالْآخِرَةِ آمالَنا، وَأَعْطِنا بِهِ فَوْقَ رَغْبَتِنا،
நாங்கள் கேட்டவற்றை எங்களுக்கு தருவாயாக! , அவரது பரகத்தினால் இம்மை, மறுமைக்கான எங்களது ஆசைகளை நிறைவேற்றுவாயாக! , அவரது பரகத்தினால் நாங்கள் கேட்டதை விட அதிகமாகவே எங்களுக்குத் தருவாயாக!
يَا خَيْرَ الْمَسْؤُولِينَ، وَأَوْسَعَ الْمُعْطِينَ،
கேட்கப்படுபவர்களில் மிகவும் சிறந்தவனே! , கொடுப்பவர்களில் மிகவும் கொடையாளனே!
اشْفِ بِهِ صُدُورَنا، وَأَذْهِبْ بِهِ غَيْظَ قُلُوبِنا،
அவரது பரகத்தின் மூலம் எங்களது உள்ளங்களிலுள்ள நோய்களை குணப்படுத்துவாயாக! , எங்களது உள்ளங்களிலுள்ள கோபங்களையும் குரோதங்களையும் நீக்கிடுவாயாக!

وَاهْدِنا بِهِ لِمَا اخْتُلِفَ فِيهِ مِنَ الْحَقِّ بِإِذْنِكَ،
சத்தியத்திலிருந்து பிளவு பட்டிலுக்கும் எங்களை உனது நாட்டத்தினால் அவர் மூலம் அதன் பக்கம் நேர்வழிப்படுத்துவாயாக!
إِنَّكَ تَهْدِى مَنْ تَشاءُ إِلىٰ صِراطٍ مُسْتَقِيمٍ،
நிச்சயமாக நீ நாடுபவர்களுக்கே நேரான பாதையில் வழிகாட்டுகின்றாய்!
وَانْصُرْنا بِهِ عَلَىٰ عَدُوِّكَ وَعَدُوِّنا إِلٰهَ الْحَقِّ آمِينَ؛
அவரது வருகை மூலம் உனது எதிரிகளையும் எங்களது எதிரிகளையும் நாங்கள் வெற்றிபெறச் செய்வாயாக! வணங்கப்படுவதற்கு உரித்தானவனே ! எமது பிரார்த்தனையை அங்கீகரிப்பாயாக!
اللّٰهُمَّ إِنَّا نَشْكُو إِلَيْكَ فَقْدَ نَبِيِّنا صَلَواتُكَ عَلَيْهِ وَآلِهِ، وَغَيْبَةَ وَ لِيِّنا ،
இறைவா! நாங்கள் எங்களது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களை இழந்துள்ளதையும் எங்களது இமாம் மறைந்துள்ளதையும் உன்னிடம் முறையிடுகின்றோம் !
وَكَثْرَةَ عَدُوِّنا، وَقِلَّةَ عَدَدِنا، وَشِدَّةَ الْفِتَنِ بِنا، وَتَظاهُرَ الزَّمانِ عَلَيْنا،
மேலும் எங்களது எதிரிகள் அதிகரித்துவிட்டனர், எங்களது எண்ணிக்கை மிகவும் குறைவானது , எங்களைச் சூழ உருவாகியுள்ள பிரச்சனைகளையும் , இக்காலத்தில் அனைவரும் எங்களுக்கெதிராக கைகோர்;த்திருப்பதையும் உன்னிடம் முறையிடுகின்றோம் .
فَصَلِّ عَلَىٰ مُحَمَّدٍ وَآلِهِ ،
இறைவா! நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லலம் அவர்கள் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் ஸலவாத் கூறுவாயாக!
وَأَعِنَّا عَلىٰ ذٰلِكَ بِفَتْحٍ مِنْكَ تُعَجِّلُهُ، وَبِضُرٍّ تَكْشِفُهُ،
இவ்வனைத்திலிருந்தும் நாங்கள் விடுபட்டு , எங்களது துன்பங்கள் நீங்க துரித வெற்றியினை எங்களுக்குத் தருவாயாக!
وَنَصْرٍ تُعِزُّهُ، وَسُلْطانِ حَقٍّ تُظْهِرُهُ،
கண்ணியமிகு வெற்றியினையும், சத்தியம் மிகு உனது ஆட்சியினையும் வெளிப்டுத்துவாயாக!
وَرَحْمَةٍ مِنْكَ تُجَلِّلُناها، وَعافِيَةٍ مِنْكَ تُلْبِسُناها،
உனது அருளினை எங்கள் அனைவரையும் சூழச் செய்வாயாக! , ஆரோக்கியத்தினை எங்கள் அனைவருக்கும் அணிவிப்பாயாக!
بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ
உனது அருளினைக் கொண்டு , கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளனே!

 

Publications